வெள்ளி, 10 டிசம்பர், 2010

கடவுள் ஒரு யாசகன்

என்ன நேர்ந்தது உனக்கு 

இப்படி நடுவீதியில் நின்று 
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 
கண்ணீரை பொலபொலவென சிந்தி 
பிறருக்கு உற்று கவனித்தாலொழிய 
புரியாத வார்த்தைகளை 
உதிர்த்து கொண்டிருக்கிறாய் 
அந்த தொப்பைவயிறு படைத்தவனிடம்.. 

உன் கண்ணீருக்கு தேற்றும் விதமாய் 
தன் தும்பிக்கையையேனும் 
அசைத்ததா அந்த கடவுள்? 

உன் வார்த்தைகளை செவிமடுத்ததாய் 
தன் முறம் போன்ற காதுகளையேனும் 
விசிறியதா? 

எந்த நம்பிக்கை உன்னை 
அந்த கடவுளிடம் அழைத்து செல்கிறது? 
அதில் சிறு அளவையேனும் 
உன்னிடத்தில் வை.. 

கடவுள் ஒரு யாசகன் 
யாசகன் ஒரு மனிதன் 
மனிதன் ஒரு கடவுள்

எப்படி

இப்படி 
இது நடந்தால் 
எப்படி இருக்குமெனும் 
எதிர்பார்ப்புடன் 
செல்லும் போது 
அதற்கு நேர்மாறாக 
நடந்தால் 
அப்படி வலிக்கிறது 
என்பதை 
எப்படி புரிய வைப்பது? 
இப்படி செய்பவர்களுக்கு.

முரண்கள்



உன்னிடம் 
சண்டை போடும் போது
சமாதானத்திற்கு 
வெள்ளைச் சிரிப்பை
ஏந்தி வருகிறாய்

கோபப்படும் போது
சமரச வார்த்தைகள்
பேச துணிகிறாய்

சமாதானமும்
சமரசமும் உனக்கானவை
கோபமும்
சண்டையும் எனக்கானவை
நம்மை 
இணைப்பது 
இந்த முரண்கள்தான்.
 

பாவனை



காத்திருந்து காத்திருந்து 
தூங்கிக் கிடக்கிறதென் 
புலன்கள்..
தாமதித்து
வீடு திரும்பி 
தூங்கட்டுமென 
எழுப்பாமல் விடுகிறாய்.. 
உன் வாசனையுணர்ந்து
விழித்துக் கொண்டயென் உறக்கம்
நீ எழுப்ப வேண்டுமென
பாவனை செய்து புரள
சற்று நேரம் கடந்து 
உன்னிலிருந்து வெளியேறியது
என் உணர்வுகளை மிதித்தபடி
உன் குறட்டையொலி..

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இவனும் இவளும் - 11

மனசு

சமையல் எரிவாயு
தீர்ந்துவிட்ட நாளொன்றில் 
உணவு வேளையில் 
பசியாற ஏதுமின்றி 
இரு ரொட்டித்துண்டுகளை
கையில் வைத்து 
பேசிக் கொண்டிருந்தோம்..
கொஞ்சம் கொஞ்சமாய்
நிறைய ஆரம்பித்தது 
மனசு..

இவனும் இவளும் - 10

நடுநிசி அழைப்பு 
நள்ளிரவில் 
யாரிடமிருந்தோ
அழைப்பு வர 
நெடுநேரம் பேசிக்
கொண்டிருந்தாய்.. 
என்ன ஏதென்று 
கேட்ட போதும் 
நெடுநாளாக பேசாத 
ஒரு நட்பிடம்
பேசுவதாக சொல்லிவிட்டு
தொடர்ந்து பேசினாய்.. 
எனக்கான நேரத்தை
விழுங்கியபடியிருக்கும்
அந்த அழைப்பின் மீது
வெறுப்பு பரவுகிறது.. 
‘என்னதான் தலைபோகிற 
அவசரம் 
அதுவும் நள்ளிரவில்..’
மனதுக்குள் மருகியபடி
நள்ளிரவில் 
தொலைபேசுபவர்களை 
மன்னிக்க முடியாமல்
தத்தளிக்கிறதென் நேசம்..

இவனும் இவளும் - 9

முரண்கள்

உன்னிடம் 
சண்டை போடும் போது
சமாதானத்திற்கு 
வெள்ளைச் சிரிப்பை
ஏந்தி வருகிறாய்

கோபப்படும் போது
சமரச வார்த்தைகள்
பேச துணிகிறாய்

சமாதானமும்
சமரசமும் உனக்கானவை
கோபமும்
சண்டையும் எனக்கானவை
நம்மை 
இணைப்பது 
இந்த முரண்கள்தான்.

இவனும் இவளும் - 8

பாவனை 

காத்திருந்து காத்திருந்து 
தூங்கிக் கிடக்கிறதென் 
புலன்கள்..
தாமதித்து
வீடு திரும்பி 
தூங்கட்டுமென 
எழுப்பாமல் விடுகிறாய்.. 
உன் வாசனையுணர்ந்து
விழித்துக் கொண்டயென் உறக்கம்
நீ எழுப்ப வேண்டுமென
பாவனை செய்து புரள
சற்று நேரம் கடந்து 
உன்னிலிருந்து வெளியேறியது
என் உணர்வுகளை மிதித்தபடி
உன் குறட்டையொலி..

இவனும் இவளும் - 7

காயம் 

அப்பா வீட்டிற்குச் சென்ற போது
வீடு ஒழுங்கு செய்கையில் 
மேஜை மீது இடித்து
முழங்காலிலேற்பட்ட 
காயத்திற்கு 
வீட்டிலிருந்தவர்கள் 
ஆளுக்கொரு மருந்தைத் தருகிறார்கள்..
அவற்றைப்
பெற்றுக் கொண்டு 
எனது அறைக்குள் சென்று
தாளிட்ட பின்
மருந்துகளைப் புறக்கணிக்கிறேன்.. 
ஊருக்குத் திரும்பி 
வருவதற்குள் 
காயமாறிவிட்டால் 
என்ன செய்வதென? 
மருந்திடாமல் தவிர்க்கிறேன்..
என் காயம் கண்டு
உனக்கேற்படும்
சிறு கோபத்தினையும் 
அதனூடான அக்கறையையும் 
பெறுவதற்கு..

இவனும் இவளும் - 6


வெறுப்பு 

கடந்த சில நாட்களாக
ஏனோ 
அவள் வரும் சின்னத் திரை 
தொடர்களைப் பாப்பதில்லை..

அவள் படம் வெளியாகியிருக்கும்
வார இதழ்களைப் 
படிக்கப் பிடிப்பதில்லை.. 

அவளை நேரில்
சந்தித்ததில்லை..
ஒருமுறை கூட 
பேசியதுமில்லை.. 

அவளுக்கு
என்னைத் தெரியவும் 
வாய்ப்பில்லை.. 

ஆன போதும் 
அவள் மேல்
வெறுப்பு வந்து தொலைகிறது

என்னவனை 
முன்னர் காதலித்தவள்
அந்த தொலைக்காட்சித் தொகுப்பாளினி
என்றறிந்த நாளிலிருந்து.. 

புதன், 21 ஜூலை, 2010

இவனும் இவளும் - 5

குறுந்தாடி குத்துகிறதென 
முத்தமிட தடுக்க 
முகச்சவரம் செய்து வந்தாய்.. 
ஆங்காங்கே ஆறேழு 
இடங்களில் ரத்தம் கசிய 
முத்தமிட்டேன் 
கண்ணீருடன் 
உன் காயங்களில் ... 
பின்னும் 
அழுது கொண்டே இருந்தேன் 
சிறுகத்தியிலேற்பட்ட 
காயத்திற்கு 
முத்தத்தாலான 
காயமே மேலென...
-------------------------
இரவுகளில் 
வரும் சிறு மரணத்தின் போது 
என் குணமறிந்து
நடக்கத் தவறுமுன் நேசம்
வித்திடுகிறது
மீளா பெருந்துயருக்கான 
பாதையொன்றை.. 
--------------------
உன்னை
வெறுப்பதாக 
சொல்லுமென்
சொற்களில் நிழலாய்
நகர்வது
உன் மீதான அதீத விருப்பமே..
----------------

இவனும் இவளும் -4

என் கவிதைகளின் 
முதல் வாசகனாகும் அவனுக்கு 
ஒவ்வொரு கவிதையுடனும் தருவேன் 
முத்தமொன்றையும்..

என் சுவாசித்தலின்
வேறுபாடுணர்ந்து நடந்து கொள்ளும்
அவனுக்கு இரவுகளில் இதயத்தை
உழச் செய்வேன்..

என் கூந்தலின் வாசம் நுகரும் அவனுக்கு
என் நேசத்தின் எல்லையற்ற வெளிகளில்
உலவ அனுமதிப்பேன்
இன்னும் விளையாடவும்..

என் தாகமுணர்ந்து ஸ்பரிசிக்கும்
அவனுக்கு
என் தொட்டிச் செடிகளில்
தினமும் பூக்கும் பூக்களை பரிசளிப்பேன்..
அத்துடன் என் செவ்விதழையும்..

எப்போதேனும் ஒரு மழை நாளில்
இதம் சேர்க்க
இளஞ்சூடான தேநீர்
தயாரித்துத் தருவேன்..
கூடவே என் தேகத்தையும்..

என்னை ரசிப்பவனுக்கு
என்னை மட்டுமே ரசிப்பவனுக்கு
பகிர்ந்தளிப்பேன்..
என் காதலின் கடைசிச் சொட்டு
தீரும்  வரை... 

அவன் அவனாக வரும் வரை
நீட்டித்திருப்பேன்
என் ஆயுளையும் ஆசையையும் ..

எல்லோருக்குமான ஒருவன்
எனக்கானவனாக   
இருக்க முடியாது..

இவளும் இவனும் -3

அன்பின் அடையாளம் 

அன்று 
உனக்கு ஜலதோஷம் 
பிடித்த போது 
விறலி மஞ்சளைச் சுட்டு 
சுவாசிக்க அறிவுறுத்தினேன்.

அதையே 
எனக்கொருமுறை
பரிந்துரைத்து
மஞ்சளைத் தந்தாய்

அதைச் சுட்டு 
கரியாக்கிவிடாமல் 
பத்திரப்படுத்துகிறேன்..
வேறொரு மஞ்சளை 
வாங்கி தீயில் சுட்டு 
சுவாசித்தேன். 

நீ கொடுக்கும் எதையும் 
தீக்கிரையாக்க மாட்டேன்.. 
அதன் அடையாளங்களை
இழந்து விடாமல் 
பாதுகாக்கிறேன்..
அவை உன் அன்பின் 
அடையாளமாயிருப்பதால்.

இவனும் இவளும் - 2


ஒவ்வொருமுறையும் 
நீ என்னை நேசிக்கிறாயாவென
சந்தேகத்துடன் 
கேட்பதில்லை.. 
சந்தோஷத்துடன் தான் 
கேட்கிறேன்..
நீ சொல்லும் 
இப்போதைய ஆமோதிப்புகளையும் 
மறுதலிப்புகளையும் 
மட்டுமல்ல..
முன்னால் 
உன்னால் 
ஒப்புக்கொள்ளப்பட்ட 
எல்லா வார்த்தைகளையும்   
சேர்த்தே கணக்கில் 
எடுத்துக் கொள்கிறேன்.. 
ஆயினும் அவ்வப்போது 
எனை உயிர்ப்பிப்பது 
நீ முன்னர் தூவிய 
அந்த ஒற்றை வார்த்தையே 

இவளும் இவனும் - 1


தொலைபேசியில்
நீயும் நானும்
மணிக்கணக்காகப் பேசிய 
பேச்சுக்கள் 
இனி குறைந்து போகலாம்..

இன்று என்ன உடை
அணிந்திருக்கிறாயென
இருவரும் கேட்டுக் கொள்ளும்
வாய்ப்பில்லாமல் போகலாம்..

என்ன சாப்பிட்டாயென
உணவுவேளை தோறும் 
விசாரிக்கும் நிலை
வேறாகலாம்..

எப்போது 
சந்திப்போமென
அதி ஆவலுடன்
காத்திருந்த 
வலியும் சுகமும் மாறிப் போகலாம்..

ஒற்றைக் காட்சியை 
நீ வேறிடத்திலும்
நான் வேறிடத்திலும் 
நின்று சிலாகித்த 
சிலீர் அனுபவங்களின்
களம் மாறலாம்..

உன் வீட்டில் நீயும்
என் வீட்டில் நானும்
தனித்திருக்கையில்
நமக்கிடையே நிகழ்ந்த 
சந்தோஷங்கள் வேறாய் மாறாலாம்..
வலிகள் சந்தோஷமாய் மாறலாம்..
இன்னும் சில நாட்களில் 
நிகழவிருக்கும் நமது 
திருமணத்திற்கு பிறகு.

ஞாயிறு, 6 ஜூன், 2010

ஸ்டாலினாவின் காதல்

இந்த காதல் சின்ன சின்ன மாற்றங்களை சத்தமின்றி நிகழ்த்தும்..ஒரு யுத்த களமாக மனதை ஆக்கிவிடும். அதிலும் இருவரில் ஒருவர் அதை நட்பென்றும் மற்றொருவர் அதை காதலென்றும் வாதிட்டு சண்டையிட்டுக் கொள்வது பிறந்த குழந்தைக்கு என் பெற்றோரின் பெயர்தான் வைக்க வேண்டுமென தம்பதிகள் சண்டையிட்டுக் கொள்வது போல இருக்கிறது. இது எதுவும் அறியாத அந்த குழந்தையைப் போலவே இருவருக்கான நேசமும் என்ன் ஏதென்று தெரியாமல் குழப்பத்திலே நின்றிருக்கும். எல்லாம் சில நாட்கள் தான்.. பேசிப் பேசி இந்த பிரச்சினையை சரி செய்து கொண்டு விடலாம் என் நம்பிக்கையோடு ஒருவர் முன்னேறுகையில் மீண்டும் அந்த பிரச்சினையை இது நட்பு தான் என்று இன்னொருவர் கிளப்பி விடுவர்.. இந்த நபுக்கும் காதலுக்கும் என்ன வேறுபாடு? ஏன் இந்த மனம் நட்பை ஏற்றுக் கொள்கையில் காதலை ஏற்றுக் கொள்வதில்லை.. அல்லது காதல் வரை சென்ற மனம் நட்பில் லயிக்க முடிவதில்லை.. இது பேசப் பட வேண்டிய விஷயம்..

"நீயாய் சூட்டிக் கொள்கிறாய்..
நட்பென்றும் காதலென்றும்..
இரண்டுமில்லை..
இது இருவருக்கான அன்பு..
இருவருக்கானது மட்டுமே..
பிரிந்திருக்க ஒப்பாத பிரியம்
அவ்வளவே"

ஸ்டாலினாவின் காதல் வெளி குறித்த பார்வை இன்னும் தொடரும்..

காதல் எதுவும் செய்யும்

இந்த காதல் செய்யும் பொல்லா தனங்கள் இருக்கிறதே.. அப்பப்பா இதை எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது அனுபவித்து இருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.. நேசம் கொண்ட இருவருக்கிடையே ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே மனம் படும் பாடு இருக்கிறதே..அதை சொல்லில் அடக்க முடியாது.. அவ்வளவு வலியானது.. யாரவது அப்போது நல்லவிதமாக நாலு வார்த்தைகள் சொல்ல மாட்டார்களா? என ஏங்கிக் கிடக்கும் அந்த சிறு மனம்.. பேரறிஞர்கள் சொன்ன பொன்மொழியிலும், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலும் தமக்கு தேவையான இடங்களையும், மேற்கோள்களையும் எடுத்துக் காட்டி யாரேனும் பேச ஆரம்பித்தால் என்ன வேலை எப்படிக் கிடந்தாலும் அதில் போய் ஒட்டிக் கொள்ளும்.. அந்த இடத்திலிருந்து கரை கடக்க தானே அந்த மனம் முயன்றாலொழிய அது அவ்விடத்தை விட்டு நகராது.. இந்த காதல் என்ன செய்யும்? என்ற கேள்விக்கு ஒரே பதில் தான் உண்டு.. இந்த காதல் எதுவும் செய்யும்.. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகையே புரட்டியும் போடும்..

''காதல் தன்னை காத்துக் கொள்ளும்
காதலுக்கு தடைகள் ஆயிரம் வந்த போதும்..
காதல் தன்னை மாய்த்துக் கொள்ளும்
காதலித்தவரே காயப் படுத்தும் போது''...

''புரிதலில் விதைக்கப்படும் காதல்
அறுவடையாகிறது
புறத்தோற்றத்தில் தூவப்படும் காதல்
பலியாகிறது ''  

ஸ்டாலினாவின் காதல் குறித்த பார்வை இன்னும் தொடரும்..