வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இவனும் இவளும் - 11

மனசு

சமையல் எரிவாயு
தீர்ந்துவிட்ட நாளொன்றில் 
உணவு வேளையில் 
பசியாற ஏதுமின்றி 
இரு ரொட்டித்துண்டுகளை
கையில் வைத்து 
பேசிக் கொண்டிருந்தோம்..
கொஞ்சம் கொஞ்சமாய்
நிறைய ஆரம்பித்தது 
மனசு..

இவனும் இவளும் - 10

நடுநிசி அழைப்பு 
நள்ளிரவில் 
யாரிடமிருந்தோ
அழைப்பு வர 
நெடுநேரம் பேசிக்
கொண்டிருந்தாய்.. 
என்ன ஏதென்று 
கேட்ட போதும் 
நெடுநாளாக பேசாத 
ஒரு நட்பிடம்
பேசுவதாக சொல்லிவிட்டு
தொடர்ந்து பேசினாய்.. 
எனக்கான நேரத்தை
விழுங்கியபடியிருக்கும்
அந்த அழைப்பின் மீது
வெறுப்பு பரவுகிறது.. 
‘என்னதான் தலைபோகிற 
அவசரம் 
அதுவும் நள்ளிரவில்..’
மனதுக்குள் மருகியபடி
நள்ளிரவில் 
தொலைபேசுபவர்களை 
மன்னிக்க முடியாமல்
தத்தளிக்கிறதென் நேசம்..

இவனும் இவளும் - 9

முரண்கள்

உன்னிடம் 
சண்டை போடும் போது
சமாதானத்திற்கு 
வெள்ளைச் சிரிப்பை
ஏந்தி வருகிறாய்

கோபப்படும் போது
சமரச வார்த்தைகள்
பேச துணிகிறாய்

சமாதானமும்
சமரசமும் உனக்கானவை
கோபமும்
சண்டையும் எனக்கானவை
நம்மை 
இணைப்பது 
இந்த முரண்கள்தான்.

இவனும் இவளும் - 8

பாவனை 

காத்திருந்து காத்திருந்து 
தூங்கிக் கிடக்கிறதென் 
புலன்கள்..
தாமதித்து
வீடு திரும்பி 
தூங்கட்டுமென 
எழுப்பாமல் விடுகிறாய்.. 
உன் வாசனையுணர்ந்து
விழித்துக் கொண்டயென் உறக்கம்
நீ எழுப்ப வேண்டுமென
பாவனை செய்து புரள
சற்று நேரம் கடந்து 
உன்னிலிருந்து வெளியேறியது
என் உணர்வுகளை மிதித்தபடி
உன் குறட்டையொலி..

இவனும் இவளும் - 7

காயம் 

அப்பா வீட்டிற்குச் சென்ற போது
வீடு ஒழுங்கு செய்கையில் 
மேஜை மீது இடித்து
முழங்காலிலேற்பட்ட 
காயத்திற்கு 
வீட்டிலிருந்தவர்கள் 
ஆளுக்கொரு மருந்தைத் தருகிறார்கள்..
அவற்றைப்
பெற்றுக் கொண்டு 
எனது அறைக்குள் சென்று
தாளிட்ட பின்
மருந்துகளைப் புறக்கணிக்கிறேன்.. 
ஊருக்குத் திரும்பி 
வருவதற்குள் 
காயமாறிவிட்டால் 
என்ன செய்வதென? 
மருந்திடாமல் தவிர்க்கிறேன்..
என் காயம் கண்டு
உனக்கேற்படும்
சிறு கோபத்தினையும் 
அதனூடான அக்கறையையும் 
பெறுவதற்கு..

இவனும் இவளும் - 6


வெறுப்பு 

கடந்த சில நாட்களாக
ஏனோ 
அவள் வரும் சின்னத் திரை 
தொடர்களைப் பாப்பதில்லை..

அவள் படம் வெளியாகியிருக்கும்
வார இதழ்களைப் 
படிக்கப் பிடிப்பதில்லை.. 

அவளை நேரில்
சந்தித்ததில்லை..
ஒருமுறை கூட 
பேசியதுமில்லை.. 

அவளுக்கு
என்னைத் தெரியவும் 
வாய்ப்பில்லை.. 

ஆன போதும் 
அவள் மேல்
வெறுப்பு வந்து தொலைகிறது

என்னவனை 
முன்னர் காதலித்தவள்
அந்த தொலைக்காட்சித் தொகுப்பாளினி
என்றறிந்த நாளிலிருந்து..